திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (14:11 IST)

போலீஸை அடித்து கொன்ற மறுவாழ்வு மையம்: பகீர் ரிப்போர்ட்

திருச்சியில் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானார் என மறுவாழ்வு மையத்தில் சேர்த்த போலீஸ் அதிகாரியை அவர்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் ‘லைப் கேர் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மறுவாழ்வு மையம் ஒன்று இயங்கிவருகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இம்மையத்தில் கடந்த 28ம் தேதி பெண்ணாடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தமிழ்செல்வன் என்கிற காவலாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜூன் 1 ஆம் தேதியன்று தமிழ்செல்வனுக்கு சிகிச்சை அளித்தபோது இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்திருக்கின்றனர் மறுவாழ்வு மையத்தினர்.

உறவினர்களுக்கும் சந்தேகம் எதுவும் எழாததால் உடலை அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் தமிழ்செல்வனின் உறவினரான இளங்கீரன் என்பவருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க உறவினர்கள் சிலரோடு சில நாட்கள் முன்பு மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரித்திருக்கிறார். அவர்கள் இவர் கேள்விக்கு சரியாக பதிலளிக்காததோடு திமிராகவும் பேசியுள்ளனர். அவர்களை மீறி உள்ளே சென்று பார்த்தபோது அங்கே பலரை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதையும், இருட்டு அறைகளில் பூட்டி வைத்திருப்பதையும் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பலருக்கு உடலெல்லாம் அவர்கள் அடித்து உதைத்ததால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன.

உடனடியாக இதுகுறித்து இளஞ்கீரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்டு அவரது உறவினர்களிடமே ஒப்படைத்தனர். மேலும், தமிழ்செல்வன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் புகார் அளித்திருப்பதால் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.