செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (21:01 IST)

தாலி கட்டிய பின் தற்கொலை- கலங்க வைத்த காதலர்களின் கதை

பல போலியான காதல் செய்திகளை படித்து கடுப்பானா நாம் சில சமயம் இது போன்ற உண்மையான காதலுக்கு கலங்கவும் செய்கிறோம். பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் சொல்லவில்லை. காதலையும் விட்டு கொடுக்க முடியவில்லை. கடைசியாக உயிரை விட்டுவிடலாம் என்று முடிவெடுத்துவிட்டனர் அந்த காதலர்கள். 

கும்பகோணம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுரேஷ். சில வருடங்களுக்கு முன்னால் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது அவரோடு படித்த சரண்யா என்ற பெண்ணோடு சுரேஷுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் பேசி பழக தொடங்க அது காதலாக மலர்ந்தது. இருவருமே தங்களது பெற்றோர் மேல் அளவுகடந்த அபிமானம் வைத்திருந்ததால் அவர்களின் சம்மதத்தை பெற்றே திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முதலில் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்கள்.

படிப்பு முடிந்த பிறகு சுரேஷ் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதேபோல் சரண்யாவும் தற்காலிக பணியாளராக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதுதான் சரியான தருணம். வீட்டில் காதல் விஷயத்தை சொல்லிவிடலாம் என இருவரும் முடிவெடுத்தனர். சரண்யா தான் சுரேஷை காதலிப்பதாகவும் அவரை மணந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். சுரேஷும் தான் சரண்யாவை விரும்புவதை பற்றி அவரது வீட்டில் பேசியுள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தும் அவர்களது பெற்றோர் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சரண்யாவிற்கு அவரது பெற்றோர் வேறு வரன் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதை சரண்யா சுரேஷிடம் சொல்லி அழுதுள்ளார். கடைசியாக இருவரும் ஒரு முடிவெடுத்தனர். தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் சரண்யாவை தனது வீட்டிற்கு வர சொல்லியிருக்கிறார். சரண்யா வந்ததும் அவருக்காக வாங்கி வைத்திருந்த பட்டு புடவையை அவரிடம் கொடுத்து கட்டிக்கொள்ள சொல்லியிருக்கிறார். வீட்டிலேயே தாலி கட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறகு வாங்கி வைத்திருந்த எலிமருந்தை சாப்பிட்டு இருவரும் மயங்கி அருகருகே விழுந்தனர். மாலை வீட்டுக்கு வந்து பார்த்த சுரேஷின் பெற்றோர் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காதல் ஜோடி இருவரின் உயிரும் பிரிந்தது.

கள்ளங்கபடமற்ற ஒரு காதலை பிரிக்க நினைத்து தங்கள் குழந்தைகளை பலி கொடுத்துவிட்டதை எண்ணி அவர்கள் பெற்றோர் கலங்கி நிற்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கும்பகோணம் தெற்கு மண்டல போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.