1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (14:57 IST)

பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே ஆதார் எண் பதிவு..! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

Student
பள்ளிகள் திறப்பு நாள் அன்றே ஆதார் பதிவு செய்யும் முகாம் பள்ளிகளில்  தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் திறப்பு நாள் அன்றே பள்ளிகளில் ஆதார் பதிவு செய்யும் முகாம் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகளில் மதிய உணவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை மற்றும் மிதிவண்டிகள் போன்ற விலையில்லா நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றன.
 
மாணவர்களுக்கு அளிக்கப்படும் இந்த நலத்திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. பயிலும் பள்ளிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம், ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

 
இந்நிலையில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி துவக்க நாளான வரும் 6ம் தேதி அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது என்று  குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.