1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (10:44 IST)

ஒரு முன்னாள் அமைச்சரை இப்படியா கை ஆள்வது? ஆர்.பி உதயகுமார் ஆதங்கம்!

ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும் என ஆர்.பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார். 

 
அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருப்பில் உள்ளது.
 
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்லும் வாய்ப்பு உள்ளதாக போலீஸ் கருதும் நிலையில் அவர் வேறு நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இதனிடையே ராஜேந்திர பாலாஜி குறித்து ஆர்.பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். காவல்துறை விசாரிக்கிறது. எங்கள் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். ஒருவர் மீது வழக்கு இருப்பதாலேயே அவரைக் குற்றவாளியாகப் பார்க்கமுடியாது. 
 
ராஜேந்திர பாலாஜி வழக்கு நிலுவையில் உள்ளது. தீர்ப்புக்காக காத்திருக்கிறார். சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதற்காக, தீவிரவாதத்தில் மதவாதத்தில் ஈடுபடுகிற நபர்களை கையாள்வது போல முன்னாள் அமைச்சரை கையாள்வது உண்மையிலேயே பழிவாங்கும் நடவடிக்கை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.