வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (11:57 IST)

வேகமாக பரவும் பறவை காய்ச்சல்..! தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!

bird flu
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திரா மாநிலம் நெல்லுார் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் கர்நாடகாவிலும் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் வராமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
 
Bird Fluu
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் நிலைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
 
பறவை காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அதேப்போன்று பறவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கால்நடைத்துறையினருடன் இணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


5 மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.