ஆணவக்கொலை தொடர்பாக “ரஞ்சித் பேசியதை தீவிரவாத செயலாகத்தான் பார்க்க வேண்டும்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் வன்னி அரசு புகார்.!
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாக திரைப்பட நடிகர் ரஞ்சித் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திரைப்பட நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் ட்ரைலரில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், விசிக கட்சியை அவமானப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு காட்சிகளை வைத்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் மற்றும் தணிக்கை குழுவிடம் நாங்கள் புகார் கொடுத்த பின் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு இந்த திரைப்படம் வெளியானது என்றும் கடந்த 10-ம் தேதி நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், அதை ஊக்குவிக்கிற வகையிலும், அது தவறில்லை என்கிற வகையிலும் பொதுவெளியில் கருத்துகளை தெரிவித்தார் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆணவக் கொலை தொடர்பாக தமிழகத்தில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நியாயப்படுத்தும் விதமாக நடிகர் ரஞ்சித் பேசி இருப்பது மிகவும் மோசமான செயல் என்று வன்னி அரசு தெரிவித்துள்ளார். மேலும், “சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆணவக் கொலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு இவ்வாறு மோசமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது அவருடைய திட்டமிட்ட சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தை காட்டுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். படுகொலைகளை ஆதரிக்கும் அவருடைய வன்முறை எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது என்றும் ஏற்கெனவே, நடந்த படுகொலைகளுக்கும் நியாயம் இருக்கிறது என்று சட்டத்திற்கு புறம்பான வகையிலும் பேசி வருவது என்பது மிகப்பெரிய ஒரு தீவிரவாத செயலாகத்தான் பார்க்க வேண்டும் என்றும் வன்னி அரசு கூறியுள்ளார்.
இதனால் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.