வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (09:30 IST)

11ஆம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வு நடத்த முடியாததால் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதால் அவர்கள் மட்டும் பாஸ் என அறிவிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்தியால் மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு 11ஆம் வகுப்பு மாணவர்களும் பாஸ் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் ராம்தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியதாவது:
 
தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 70 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. முக்கியமான இத்தேர்வுகளை எழுத முடியாதது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்த அச்சம்தான் பெரும்பான்மையான மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம்.
 
சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளும், பிறமாநில பாடத்திட்ட தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஒத்திவைக்கப்படலாம் என்ற தவறான நம்பிக்கையில் பல மாணவர்கள் தேர்வுக்கு செல்ல தவறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
கொரோனா அச்சம் தணிந்த பின்னர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் பிறகு தான் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். 11-ம் வகுப்புக்கு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளை ஏராளமான மாணவர்கள் எழுதாத நிலையில் 11-ம்வகுப்பிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு காரணமாக அனைத்துத் தரப்பினருக்கும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகளும் கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது.
 
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.