தமிழை கட்டாயமாக கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்துவேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் 2014-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தவிர்த்த பிற கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், அடுத்த ஆண்டில் பத்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்; அதற்கான தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளை சரியான நேரத்தில் எச்சரிக்கும் வகையிலான இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் மத்திய இடை நிலைக் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ) பாடத் திட்டம், இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் (ஐ.சி.எஸ்.சி) பாடத் திட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் (விலக்களிக்கப்பட்ட சிலவற்றைத் தவிர) பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் நாள் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் பாமக தொடர் அழுத்தமும், வலியுறுத்தலும் உள்ளது என்ற வகையில் தனியார் பள்ளி இயக்ககத்தின் நடவடிக்கை மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், இதை வெற்றியாக செயல்படுத்துவதற்கு அரசியல் துணிவும், விழிப்புணர்வும், தொடர் முயற்சியும் தேவை என்பதை தனியார் பள்ளிகள் இயக்ககம் உணர வேண்டும். தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாகக் கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலம் நிலவுகிறது. அதை மாற்றுவதற்காக பாமக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் 9ம் நாள் தமிழ் கற்றல் சட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இச்சட்டம் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். அதன்படி 2006-07-ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் தொடங்கி, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக நீட்டிக்கப்பட்டு, 2015-16-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சில தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி தடை பெற்றதால் இன்று வரை, மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ்ப் பாடம் கட்டாயமாக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். தமிழ்க் கற்றல் சட்டத்தின் படி 2015-16-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததைக் கண்டித்தும், தமிழ்க் கற்றல் சட்டத்தின் கீழ் பிற கல்வி வாரிய பள்ளிகளையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாமக தொடர் இயக்கங்களை மேற்கொண்டது. அதன் காரணமாகவே பிற கல்வி வாரிய பள்ளிகளையும் தமிழ்க் கற்றல் சட்டத்தில் சேர்ப்பதற்கான அரசாணை எண் 145 கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசால் பிறப்பிக்கப்பட்டது.
அந்த அரசாணை எதற்காக பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ்க் கற்றல் சட்டத்தை மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி, பிற கல்வி வாரிய பள்ளிகளில் செயல்படுத்துவதிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே பாமக-வின் கவலை ஆகும். தமிழ்க் கற்றல் சட்டத்தின் முதன்மைக் கூறுகளில் ஒன்று, அதற்கான அரசாணைகளில் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கு தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதுடன், அதற்கான தேர்வுகளையும் நடத்தி அது தொடர்பான ஆவணங்களை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான்.
மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடத்தை கற்பித்ததாகவும், அதற்கான தேர்வுகளை நடத்தியதாகவும் ஆவணங்களை தாக்கல் செய்த பள்ளி நிர்வாகங்கள், கடைசி நேரத்தில் தங்களின் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கான வசதிகள் இல்லை என்று கூறி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து தங்கள் மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் மூலம் விலக்கு பெற்றன. அதே நிலை பிற கல்வி வாரிய பள்ளிகளில் ஏற்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பிற கல்வி வாரிய பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்பதாம் வகுப்புக்கும், அடுத்த ஆண்டில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புக்கும் தமிழ் மொழிப் பாடத்தேர்வை தமிழக அரசுத் தேர்வுத் துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது சிறந்த ஏற்பாடுதான்.
ஆனால், அதற்கு முன்பாக பிற கல்வி வாரிய பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எந்தெந்த பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு வருகிறது.
அந்த வழக்கை திறம்பட நடத்தி, மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்க் கற்றல் சட்டத்தின்படி தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதற்கு ஏதேனும் பள்ளிகள் மறுத்தால், அந்தப் பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படும் வரை அவற்றின் முன் பாமக அறவழிப் போராட்டம் நடத்தும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran