மதுரையில் மாநாடு: கட்சி பெயர் அறிவிப்பு?- அரசியலிலும் கமலுக்கு போட்டியாக ரஜினி!!
நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்க இருப்பதாகவும், அப்போது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக 2017ம் ஆண்டு அறிவித்தார். அன்று முதல் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து பட வேலைகளில் ஈடுபட்டு வந்த ரஜினி இதுவரை கட்சி பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என ரஜினி கூறியிருந்ததால் எப்படியும் தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தர்பார் படத்துக்காக மும்பை சென்ற ரஜினி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பிறகு அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் பிரசாத் கிஷோரை சந்தித்துள்ளார் ரஜினி. இந்த பிரசாந்த கிஷோர் பிரதமர் மோடி முதல் முறை பிரதமரானபோதும், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரான போதும் பிண்ணனியில் இயங்கி வெற்றி வாய்ப்பை அதிகரித்தவர். பல அரசியல் தலைவர்கள் இவரிடம் ஆலோசனைகள் பெறுவது உண்டு.
இந்நிலையில் ரஜினிக்காக பிரசாத் கிஷோர் வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினி ஜனவரியில் பொங்கலுக்கு பிறகு மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த இருப்பதாகவும், அங்கே கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்தின் முதல் மாநாட்டை மதுரையில்தான் நடத்தினார். அங்கு வைத்து கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையும் அறிவித்தார். தற்போது ரஜினியும் மதுரையையே தேர்ந்தெடுத்திருப்பது கமலுக்கு போட்டியான அரசியாலா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.