செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (12:19 IST)

படம் நடிச்சா.. அரசியல் எப்போ? - ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி

அரசியலில் நுழைவதற்கான ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், திடீரென புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருப்பதால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
நடிகர் ரஜினிகாந்தின் பட அறிவிப்பு எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் காத்திருப்பது வழக்கம். அதே ரசிகர்கள் தற்போது ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் எனவே அதிகம் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அந்நிலையில்தான், கடந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிட்டார். 
 
தற்போது அவர் ஷங்கரின் ‘2.0’ மற்றும் ரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். காலா படம் விரைவில் வெளியாகும் நிலையில் இருக்க, கிராபிக்ஸ் பணி காரணமாக 2.0 படம் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
 
அதற்கிடையில் கமல்ஹாசன் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு, மதுரையில் மாநாட்டையும் நடத்தி முடித்துவிட்டார். எனவே, அரசியலில் வேகமாக செயல்பட வேண்டிய சூழலில் ரஜினி இருக்கிறார். அந்நிலையில்தான், நேற்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சென்னையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது, கட்டிடத்தை பலப்படுத்திவிட்டு அரசியலை தொடங்குவோம் எனக் கூறியிருந்தார்.
 
அவரிடமிருந்து அதிரடி அரசியல் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் போது, ரஜினியின் புதிய பட அறிவிப்பு நேற்று வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
 
சன் பிக்சர்ஸ் எனில் கண்டிப்பாக பிரம்மாண்ட படமாகத்தான் உருவாகும். எப்படியும், படம் முடிய ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களாகும். அதுவரை ரஜினி தீவிர அரசியலில் இறங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டதால், அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளது.