புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:39 IST)

சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசவில்லை – ராஜேந்திர பாலாஜி விளக்கம் !

சிறுபான்மை இன மக்களுக்கு நான் பேசியதாக பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றுள்ளார். அப்போது அவரிடம் மனு கொடுக்க வந்த இஸ்லாமிய மக்களிடம் ‘ நீங்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டேங்குறீங்களே. போய் திமுக காரர்களிடம் உங்கள் மனுக்களைக் கொடுங்கள்’ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவருக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் இஸ்லாமியர்கள் அவரது உருவ பொம்மையை எரித்தும் செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் பேசிய ராஜேந்திர பாலாஜி ’நேற்று முன்தினம் இரவு என் வீட்டுக்கு வந்த 3 பேர் ரேஷன் கடையை ஒதுக்கித் தர வேண்டும் எனக் கேட்டனர். நான் அதுசம்மந்தமாக தாசில்தாரிடம் புகார் கொடுக்கும்படியும் பின்னர் அதன் நகலை எனக்குக் கொடுங்கள் எனவும் சொன்னேன். ஆனால் அவர்களோ, ரேஷன் கடையை ஒதுக்க முடியுமா என இப்போதே கூறுங்கள் என்றனர். அவர்களது பேச்சு ஒரு மாதிரி இருந்ததால் நான் மறுநாள் காலை வர சொன்னேன். ஆனால் உண்மை தெரியாமல் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நான் பேசியதாக பொய் செய்தியை பரப்பி வருகின்றனர். சிறுபான்மை சமூக மக்களின் வாக்குகள் அதிமுக விற்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள். நான் சிறுபான்மை சமூக மக்களை நேசிப்பவன். ’ எனக் கூறியுள்ளார்.