வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (12:19 IST)

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

Vijay
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தனியாக 240 இடங்களை கைப்பற்றியது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதில் காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வென்றிருந்தது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் வலிமை மிக்க எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.
 
இதனிடையே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில,  ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் நேரு குடும்பத்தைச் மூன்றாவது நபர் ராகுல் காந்தி ஆவார். அவருக்கு முன், சோனியா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த பதவியை வகித்தனர்.
 
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவையில்  எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.