திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (13:49 IST)

அப்ளை செய்தும் வராத நீட் ஹால்டிக்கெட்; மனமுடைந்த மாணவி தற்கொலை!

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பித்தும் ஹால் டிக்கெட் வராததால் விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மா என்ற மாணவி. 12ம் வகுப்பு முடித்துள்ள இவருக்கு சிறு வயதிலிருந்து மருத்துவம் படிக்க ஆசை இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளார்.

சமீபத்தில் நீர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் ஹரிஷ்மாவுக்கு ஹால் டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து ஹரிஷ்மா தனது நண்பர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தனக்கு ஹால் டிக்கெட் வராதது குறித்து தொடர்ந்து வருத்தத்தில் இருந்த மாணவி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மாணவி ஹரிஷ்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆண்டுதோறும் நீட் தேர்வு தொடர்பான விவகாரங்களால் மாணவர்கள் பலர் உயிரிழந்து வரும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.