வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2020 (20:46 IST)

தமிழகத்தை பின்பற்றுங்கள்: அண்டை மாநில முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் வரும் எட்டாம் தேதி முதல் பள்ளி வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளியிட்ட அறிக்கையில் பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் தமிழகத்தை பின்பற்றுவது நல்லது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
'புதுச்சேரியில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதிலும், தொற்று விஷயத்திலும் சரியாக முடிவு எடுக்க முடியாமல் அரசு இருந்து வருகிறது.
 
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி, புதுச்சேரி அரசு அவசரமாக முடிவு எடுத்துள்ளது. கரோனா தொற்று பரவும் சூழலில் பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி தந்துள்ளது. இதன் அடிப்படையில் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பினால் மாணவர்களிடம் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
 
கல்வியில் தமிழகத்தைப் புதுச்சேரி அரசு பின்பற்றுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மறுமுடிவு எடுக்கும் போது புதுச்சேரி அரசும் முடிவு எடுப்பதுதான் நல்லது. இந்த அபாயகர சூழலில் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், மாணவர்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். இதனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
 
ஆந்திராவில் பள்ளி சென்று வந்துள்ள மாணவர்களுக்குக் கரோனா தொற்று உறுதியானதாகத் தெரியவந்துள்ளது. இதனால் ஏனாமில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றிப் புதுச்சேரி அரசு செயல்பட வேண்டும்''.
 
இவ்வாறு ரங்கசாமி தெரிவித்துள்ளார்