காவிரி விவகாரம் ; தொடர் போராட்டம் : ஸ்தம்பிக்கும் தமிழகம்
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருப்பதை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டம் தீவிரமாகியுள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நிலையில், தமிழகத்தின் பல இடங்களிலும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அதேபோல் திமுக உட்பட பல எதிர்கட்சிகளும் போராட்டங்களை துவக்கியுள்ளன. நேற்று சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் திமுக போராட்டத்தை நடத்தியது. அதேபோல், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் திமுக தரப்பில் சாலைமறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதேபோல், சாஸ்திரிபவனில் மே 17 இயக்கத்தினரை சேர்ந்த பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல இடங்களிலும் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், அதிமுக தரப்பில் நாளை 3ம் தேதி உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் சங்கம் சார்பில் விரைவில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்சி ஏப்ரல் 4ம் தேதி மறியல் போராட்டத்தை நடத்துகிறது.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கம் சார்பாக நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல், தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்களும் நாளை கடையடைப்பில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர். எனவே நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டல்கள் மூடியிருக்கும் எனத் தெரிகிறது.
திமுக தரப்பில் ஏப். 5ம் தேதி முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடையடைப்பும் அன்றே நடத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஏப் 6ம் தேதி தேமுதிக போராட்டம் நடத்துகிறது ஏப் 11ம் தேதி பாமக சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. ஏப். 11ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைகளின் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இதுபோக, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட என பல அமைப்புகளும் போராட்டத்தை தீவிர படுத்தியுள்ளதால் தமிழகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.