திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (07:02 IST)

திடீர் வேலைநிறுத்தம் எதிரொலி: சென்னையை நோக்கி வரும் தனியார் பேருந்துகள்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசுக்கும் நேற்று நடந்த ஊதியக்குழு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்பட போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஓரளவு மெட்ரோ மற்றும் மின்சார ரயில் பயணிகளுக்கு கைகொடுத்தாலும் பிற நகரங்களில் உள்ள பயணிகள் நடுவழியில் தத்தளித்தனர்

இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்தூகளை இயக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

இந்த நிலையில் இன்று காலை சென்னையில் மிகக் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சென்னையில் பயணிகளுக்கு தங்கு தடையின்றி பேருந்துகள் கிடைக்க தமிழகம் முழுவதிலும் இருந்து தனியார் பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ஒன்பது முதல் தனியார் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும் என்பதால் பயணிகளின் சிரமம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது