ஊராட்சி தலைவர் பதவி ஏலம்; கொலையான வாலிபர்
ஊராட்சி தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 , 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டியில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடப்போவது? என்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அக்கிராமத்தை சேர்ந்த சதீஷ் குமார் என்ற 25 வயதான வங்கி ஊழியர், எங்களை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விடக்கூடாது என்றும் சதீஷ் குமார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் சதீஷ் குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் மயங்கி விழுந்தார். பின்பு சதீஷ் குமாரை அருகிலிருந்த சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக போலீஸார் 7 பேரை கைது செய்துள்ளது. கைதானவர்களில் கோட்டைப்பட்டி அதிமுக கிளை செயலாளர் ராமசுப்புவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.