ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்கிறது. இத்திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவார் என்ற தகவல் வெளியாகிய நிலையில் இன்று மோடி சென்னைக்கு வருகிறார்.
ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் தமிழகம் முழுவதும் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.