ரஜினிகாந்த் தெளிவான முடிவை சொல்லிவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த்
ரஜினிகாந்த் அரசியல் குறித்த தனது தெளிவான முடிவை சொல்லிவிட்டார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இளைஞர்கள், மக்கள் மத்தியில் எழுச்சி உருவாக வேண்டும் என்றும், அரசியலில் புரட்சி ஏற்பட்டு மாற்றம் நிகழும் என தான் நம்புவதாகவும், அப்படி ஒரு மாற்றம் ஏற்படும்போது தான் அரசியலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். அப்படியே அரசியலுக்கு வந்தாலும் தனக்கு முதலமைச்சராகும் எண்ணம் இல்லை என்றும், தான் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கபோவதாகவும் தெரிவித்தார்.
ரஜினியின் இந்த பேச்சு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர்மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட’ என்று கூறினார்.