வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (17:18 IST)

மக்கள் நீதிமய்யம் அலுவலகத்தில் பிரசாந்த் கிஷோர்! கமலை முதல்வராக்க முடிவா?

இப்போதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்களை சந்திப்பது, பிரச்சாரம் செய்வது, பணம் செலவு செய்வது மட்டும் போதாது. வியூகம் அமைக்க தெரிய வேண்டும். இதற்கென கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவிலும் முளைத்துவிட்டன. இதுகுறித்து விரிவாக ஆர்.ஜே.பாலாஜி தனது எல்.கே.ஜி' படத்தில் விளக்கியிருப்பார்.
 
இந்தியாவில் இப்போதைய பிரதமரான நரேந்திரமோடியை ஒருகாலத்தில் குஜராத் முதல்வராக்கியவர்தான் இந்த பிரசாந்த் கிஷோர். தேர்தல் வியூகம் அமைப்பதில் வல்லவர் என்ற பெயர் பெற்றவர். இவர் சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இவரை இந்தியாவின் பல முதல்வர்கள் தங்களுக்காக பணிசெய்ய அழைப்பு விடுத்து வருகின்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் இவரை சந்தித்து வரும் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்காக பணிசெய்யுமாறு கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இவரை தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் வேலை செய்வார் என்றும் கமல்ஹாசனை நிச்சயம் தமிழக முதல்வராக்குவார் என்றும் கூறப்படுகிறது. கமலுக்காக பிரசாந்த் அமைக்கும் வியூகம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்