1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (21:12 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அகற்றம்

Senthil Balaji
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்து பாஜக சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் இரவோடு இரவாக அகற்றம்.
 
எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பிஜிஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பிஜிஆர் நிறுவனத்துடன் ஏன் மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது எனவும், இதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அந்த நிறுவனத்துடன் 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும், அது அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மேலும், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் கடும் மோதலில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கரூர் மாவட்ட பாஜக சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது.

அதில், "திருடர் குல திலகமே! ஊழலின் மறு உருவமே!, அணிலுக்கு அடித்த ஜாக்பாட், 5000 கோடி அதிபர் ஆக்கிய பிஜிஆர் நிறுவனம்" என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், தராசின் ஒருபுறம் பணங்கள் குவிக்கப்பட்டது போலவும், மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பாஜக சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து அகற்றும்படி உத்தரவிட்டனர். இரவோடு விரைவாக இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. இந்நிலையில் இந்த போஸ்டர்கள் தற்போது பாஜகவினரின் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.