1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 18 நவம்பர் 2017 (11:35 IST)

சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையே ரெய்டுக்கு காரணம் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சசிகலா குடும்பம் அடித்த கொள்ளை காரணமாகவே தமிழகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் மொத்தம் 10 அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. முடிவில், 2 லேப்டாப்,  பென் டிரைவ், ஜெ.விற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருவதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளனர். அதற்காகவே சோதனை நடக்கிறது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார்.