புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (11:28 IST)

போலியோ சொட்டு மருந்து – தமிழகம் முழுவதும் நாளை முகாம்

தமிழகம்  முழுவதும் நாளை சொட்டுமருந்து முகாம்கள் நடக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 1995 ஆம் ஆண்டு முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் பெருமளவு போலியோத் தாக்குதல் குறைந்துள்ளது. இருந்தாலும் இன்னமும் இந்தியா போலியோ அற்ற நாடு என்னும் நிலையை எட்டவில்லை.

அதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 10) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்கள் மூலம் இம்மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட இருக்கின்றன.

அண்மையில் பிறந்த குழந்தைகளில் இருந்து 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இந்த முகாமில் கலந்துகொள்ள வேன்டுமென அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ‘போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 15 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என வேண்டுகோள் விடுத்துள்ளது.