போலீஸை கத்தியால் குத்திய கொள்ளையன்
சென்னை அமைந்தகரை மார்க்கெட்டில் கொள்ளையனை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டரை கொள்ளையன் கத்தியால் குத்தியுள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமங்கலம் பாடிகுப்பத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). மோட்டார் சைக்கிள் திருட்டு, நகை பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த மணிகண்டனை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அமைந்தகரை மார்க்கெட்டில் மணிகண்டன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அமைந்தகரை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸ் குழுவினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் பிடிக்க முயன்றார். ஆனால் அவனோ மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனை தாக்கினார். வலது கையில் காயம் ஏற்பட்டு அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பயன்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற திருடனை, சக போலீஸார் விரட்டி பிடித்தனர். காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.