மாணவனை தாக்கிய போலீஸ்; களமிறங்கிய மனித உரிமை ஆணையம்!
சாத்தான்குளம் விவகாரத்தில் போலீஸில் அத்துமீறல் குறித்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை முன் வந்துள்ள நிலையில் போலீஸாரால் தாக்கப்பட்ட மற்ற வழக்குகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் இறந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மீதான விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் காவலர்கள் பொதுமக்களை தாக்கிய வீடியோக்கள் பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருப்பத்தூர் பகுதியில் மளிகை கடை ஒன்றில் காவலர் ஒருவர் எடை மெஷினை போட்டு உடைத்த சிசிடிவி காட்சிகள் வைரலான நிலையில் திருப்பத்தூர் எஸ்.பி சம்பந்தப்பட்ட காவலரை பணி மாற்றம் செய்ததுடன், புதிய எடை மெஷினை கடைகாரருக்கு வழங்கி வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் கோயம்புத்தூர் பகுதியில் வண்டிக்கடை நடத்தி வரும் பெண்மணியை போலீஸார் திட்டியதால், தட்டிக்கேட்ட பெண்மணியின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகனை போலீஸ் தாக்கியதாக வீடியோ வைரலாக தொடங்கியது. இதுகுறித்து மனித உரிமை ஆணையம் கோவை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மோகன்தாஸ் தாமாக முன் வந்துள்ளார். தொடர்ந்து போலீஸாரால் மக்கள் தாக்கப்பட்ட விவகாரங்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.