வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம்: புதிய பொறுப்பாளர் நியமனம்!
சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் காவல் நிலையம் முழுமையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வரும் நிலையில் காவலர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல்நிலையம் முழுவதுமாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்நிலையத்திற்கு பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.