தாலி கட்டிய கணவன்; அழைத்து சென்ற காதலன்! – எல்லாரையும் கைது செய்த போலீஸ்!

Prasanth Karthick| Last Modified வியாழன், 21 மே 2020 (12:10 IST)
கன்னியாக்குமரியில் மைனர் பெண்ணை திருமணம் செய்தவரும், அந்த பெண்ணை அழைத்து கொண்டு ஓடிய காதலரும் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி புலியூர்க்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது 17 வயது மகள் தக்கலை அருகே உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கும் அந்த பகுதியில் சிறு வியாபாரம் செய்து வரும் சுதீஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் உடனடியாக புலியூர்க்குறிச்சியை சேர்ந்த விவேக் என்னும் 35 வயது ஆணுக்கு அந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளார்.

முதலிரவு அன்று அறைக்குள் வந்த விவேக்கிடம் தனது காதல் கதையை சொல்லி தனக்கு தன் காதலுடந்தான் வாழ விருப்பம் என அந்த பெண் பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த விவேக் வெளியேற, சுதீஷ் வந்து அந்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளிக்க, போலீஸார் சுதிஷ் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் இருவருக்கும் இடையேயான காதல் குறித்து கூறிய சுதீஷ் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பிறகு முறைப்படி பெண் கேட்கலாம் என காத்திருந்ததாகவும், அதற்குள் நிலைமை கைமீறி பொய்விட்டதாகவும் கூறியுள்ளார். எனினும் 17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக மணமகன் விவேக், காதலன் சுதீஷ் மற்றும் பெண்ணின் பெற்றோர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :