அதிமுக அணியில் பாமக? கூட்டணிக்கு தயாராகும் கட்சிகள்
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் முதல்கட்டமாக கூட்டணியை வலுவாக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதிமுக, திமுக உள்பட எந்த கட்சியும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட விரும்பவில்லை என்பதால் கூட்டணி அமைப்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கருணாநிதி சிலை திறப்பு விழாவின் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதை அடுத்து அதிமுக-பாஜக கூட்டணியும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அன்புமணியை எம்பி ஆக்கியே தீர வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் பாமகவும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அமமுக, தமாகா, உள்பட ஒருசில கட்சிகள் இரண்டு கூட்டணியிலும் இணைய முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.