8 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்ததால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சங்ககிரியில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேசன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 748 பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 8 மாவட்டங்களில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களுக்கு மட்டும், 1 லிட்டர் டீசலுக்கு 60 பைசா குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இவர்களுக்கு மட்டும் ஐஓசி அதிக கமிஷன் கொடுப்பதால் குறைவான விலைக்கு
விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பெட்ரோல் பங்க் டீலர்கள் தரப்பில் 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சேலத்தில் பெட்ரோல் டீலர் அசோசியேசன், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து மாவட்ட நிர்வாகம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது
இதனால் 8 மாவட்டங்களில் பெட்ரோல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் கொள்முதலை டீலர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான பங்க்-களில் பெட்ரோல், டீசல் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
