டெங்கு நோயை கட்டுப்படுத்த ஜப்பானின் தடுப்பூசி.. மத்திய அரசு அங்கீகாரம்...!
இந்தியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் ஒரு மைல்கல்லாக, ஜப்பானின் Takeda நிறுவனத்தின் QDENGA தடுப்பூசிக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் டெங்கு பாதிப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், இது ஒரு முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசி 4 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், முன் பரிசோதனை இன்றி இந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த தடுப்பூசி தலா 0.5 மி.லி அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக, மூன்று மாத இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும். டெங்குவின் நான்கு வகையான வைரஸ் வகைகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 28,000 பேரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஏழு ஆண்டுகால தரவுகள் மூலம் இதன் செயல்திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தடுப்பூசி, இதுவரை 43 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு, 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையை பெற்றுள்ள இந்த தடுப்பூசி, தற்போது இந்தியாவின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் இணைந்து, இந்தத் தடுப்பூசியும் டெங்கு பரவலைக் குறைக்க உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
