1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (15:25 IST)

விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் (வீடியோ)

கரூரில் போக்குவரத்துத்துறை  அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட மாட்டு வண்டி தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 
நீதிமன்ற உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் மணல் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகளில் மட்டும் அல்லாது மாட்டு வண்டியிலும் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
மணல் தட்டுப்பாட்டின் காணமாக ஒரு லோடு மணல் விலை ரூ 25 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனால் கட்டடத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாட்டு வண்டியில் மணல் எடுத்து விற்பனை செய்து வந்த தொழிலாளர்களின் தொழில் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. 
 
இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி கேட்டு பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை இல்லாமல் போனது. இந்நிலையின் இன்று கரூர் விருந்தினர் மாளிகையில் இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து கோரிக்கை வைக்க திரண்டனர். பேச்சுவார்த்தையின் போது சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
மாட்டு வண்டித் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்த அமைச்சர் அவர்களின் குறைகளை கேட்டார். பின்னர், மணல் எடுக்க நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால் இதற்கு சட்டப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய சூழல் உள்ளது. எனவே. மாட்டு வண்டி தொழிலாள்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் மனு கொடுங்கள் அதை வைத்து நீதிமன்றத்தில் அனுமதி பெற நடவடிக்கை  எடுக்கலாம். அதுவரை  பொறுமையாக இருங்கள் என அமைச்சர் ஆலோசனை கூறியதையடுத்து  தொழிலாளர்கள்  கலைந்து சென்றனர்.