வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 22 மே 2023 (17:38 IST)

சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் - எடப்பாடி பழனிசாமி

’புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில், சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர்’ என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’விழுப்புரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளச்சாராயத்தால் 23 பேர் பலியான சுவடே இன்னும் மறையும் முன்னர்,நேற்று தஞ்சாவூரில் அரசு பாரில் சட்டவிரோதமான மது விற்பனையில் இருவர் மரணம்‌ அடைந்துள்ள சூழ்நிலையில்,
இன்று தனியார் தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு அனுமதி பெற்ற மதுபான பாரில் சிறிதும் அச்சமின்றி, கந்தவர்கோட்டை காவல் ஆய்வாளரின் முழு ஒத்துழைப்போடு அவர்களின் நேரடி கண்காணிப்பில் 24 மணிநேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவது அம்பலமாகியுள்ளது, இதை கண்டு சட்டவிரோத மது விற்பனையால் இன்னும் எத்தனை உயிரிழப்புகள் நிகழுமோ என மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

மக்கள் உயிர்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறையின்றி தங்களுக்கு கமிஷன் கிடைத்தால் மட்டும் போதும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்த விடியா திமுக அரசு இன்னும் எத்தனை உயிர்பழிகளை வாங்கத் துடிக்கிறது எனத் தெரியவில்லை, ஆகவே இந்த குடும்ப ஆட்சியின் பொம்மை முதல்வர் இதுகுறித்தாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்’’. என்று தெரிவித்துள்ளார்.