பழனி அருகே கோர விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
பழனி அருகே ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோடு பகுதியை சேர்ந்த சசி(62), பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டார். இதனையடுத்து சசி அவரது மனைவி விஜி(60), பேரன்கள் அபிஜித்(17), ஆதித்யன்(12). அதேபகுதியை சேர்ந்த சுரேஷ்(58), சுரேஷின் மனைவி லேகா(50), அவர்களது மகன் மனு(27) மற்றும் உறவினர் சஜினி(52) ஆகியோருடன் காரில் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
இந்நிலையில் தரிசனம் முடித்து விட்டு இன்று அதிகாலை 12.30 மணியளவில் திண்டுக்கல்-பழனி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். காரை சுரேஷ் ஓட்டி வந்தார்.
சிந்தலவாடம்பட்டி என்ற இடத்தில், பழனியில் இருந்து பெரியகுளம் தென்கரைக்கு பழைய இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரி, கார் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜி, ஆதித்யன், அப்ஜித் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜி உயிரிழந்தார்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆதித்யன், அப்ஜித் ஆகிய இருவரில் அப்ஜித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.