அதானி விவகாரம்: அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: பாமக வழக்கறிஞர் பாலு
அதானி விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல் தெரிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்த நிலையில் இந்த வெற்று மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் - அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றும் இது குறித்து தவறான தகவலை பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்சாரத்துறை அமைச்சரின் வெற்று மிரட்டல்களுக்கு பாமக அஞ்சாது. அதானி குழுமம் தமிழக மின் வாரியத்துக்கு கையூட்டு கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?
அதானி ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாத அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கமாக பாடும் பல்லவியை மீண்டும் பாடி உள்ளார். செந்தில் பாலாஜி மது வணிக துறையை கூடுதலாக கவனித்து வருவதால் பாமக-வின் வினா புரியாமல் இருந்திருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை வினாவை முன்வைக்கிறேன். அதை நன்றாக படித்து விட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க வேண்டும். முதல்வர்-அதானி சந்திப்பு நடக்கவில்லை என்றால் அதுகுறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடுக்க அரசு தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
Edited by Mahendran