எடப்பாடி ஆட்சியில் அங்கீகாரம் இல்லையா? - ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி
தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
துணை முதல்வர் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொடுக்கப்பட்டவுடன், தர்ம யுத்தத்தை ரத்து செய்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி அணியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலுமே அவருக்கு சரியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என முன்பே செய்திகள் வெளியானது.
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி மற்றும் மைத்ரேயன் உள்ளிட்டோரோடு நேற்று டெல்லி சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் இன்று பிரதமரை சந்தித்து தாங்கள் ஒதுக்கப்படுவது குறித்து முறையிடுகிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரதமர் சந்திப்பிற்கு பின் பேட்டியித்த ஓ.பி.எஸ்-ஸிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “எனக்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையேயும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் தொடர்பாகவே பிரதமரை சந்தித்து பேசினோம். மற்றவர்களின் ஊகங்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. இந்த ஆட்சி தொடரும். தற்போதுள்ள அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படாது. எல்லா அமைச்சர்களுடனும் கலந்து ஆலோசித்த பின்பே முதல்வர் முடிவெடுக்கிறார். எங்களுக்கு சரியாக அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது பொய்யான செய்தி” என அவர் தெரிவித்தார்.
அப்போது ஒரு நிருபர், தினகரனை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இனிமேல் கட்சியின் அடிமட்ட நிலையிலிருந்து வருபவர்களுக்கே பதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.