1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:44 IST)

எடப்பாடிக்கு எதிராக எம்.எல்.ஏ போர்க்கொடி - தினகரன் அணியில் இணைவாரா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரது அணியில் உள்ள விருதாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் போர்க்கொடி தூக்கியிருப்பது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
 
இந்நிலையில், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன், தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  அவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து, தனது தகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்த மனுவைக் கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தமிழகத்தில் பல ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்த அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நீட் தேர்வு விவகாரத்திலும் மாணவர்களை ஏமாற்றி விட்டனர்.


 

 
சசிகலா கூறியதால்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்தோம். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உண்மைதான். நாங்கள் யாரும் மருத்துவமனையில் ஜெ.வை பார்க்கவில்லை.
 
இந்த அரசை விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள். இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது” என அவர் பேசினார்.
 
ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உள்ள நிலையில், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் எடப்பாடிக்கு எதிராகவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருப்பது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.