திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (17:18 IST)

பஞ்சாயத்தை கூட்டிய பன்னீர் ; வரிந்து கட்டும் எடப்பாடி : 24ல் தெரியுமா ரிசல்ட்?

வருகிற 24ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் அதிமுக பஞ்சாயத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சரியாக கடந்த ஓராண்டுக்கு முன்னர் தொடங்கிய தர்மயுத்தத்தை பாதியில் விட்டுவிட்டு எடப்பாடியுடன் கை குலுக்கினார் பன்னீர்செல்வம். தனக்கு துணை முதல்வர், மா.பா.விற்கு அமைச்சர், துணையாக வந்தவர்களுக்கு கட்சி வழிகாட்டுதல் குழுவில் இடம் மேலும் இக்குழு கூடி கட்சிபதவிகளுக்கு நியமனம் செய்கையில் ஒபிஎஸ் ஆதரவாளர்களுக்கு கணிசமான இடம் என முடிவு செய்யப்பட்டது. 
 
ஆனால் அந்தோ பரிதாபம்! வழிகாட்டு குழு கடந்த ஓராண்டாக கூடவேயில்லை. அதனால் கட்சி பதவி யாருக்கும் கிடைக்கவில்லை. மாபாவிற்கு கிடைத்தது பைசா பெறாத தொல்பொருள் துறை அமைச்சர் பதவி. ஓ.பி.எஸ்.சால் தனக்கு தேவையான ஐஏஎஸ் அதிகாரியை கூட தன்னுடைய துறைக்கு கேட்டுப்பெற முடியாத சூழ்நிலை. பல்லைக்கடித்து ஓராண்டு ஒட்டியது எதற்காக என விசாரிக்கும் போது தான் தெரிய வந்தது உண்மையான காரணம்.

 
அணிகள் இணைப்பின்போது பேசிய மோடி, தற்போதைக்கு துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஓராண்டு பொருத்து நீங்கள் மீண்டும் முதல்வராக வாய்ப்புள்ளது என கூறியதாக தெரிகிறது . எனவே தற்போது ஓராண்டு முடிந்துவிட்டதால் தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என எதிர்பார்க்கிறார் . பன்னீரின் இந்த ஆசை குறித்து தெரிந்த எடப்பாடி முதல்வர் பதவி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தெளிவாக கூறிவிட்டார். இதனால் தான் தேனியில் பழைய கதையை அவிழ்த்து விட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 
 
வருகிற சனிக்கிழமை அதாவது பிப்ரவரி 24ம் தேதி, தமிழகம் வரும் மோடியின் கட்டப்பஞ்சாயத்து களை கட்டப்போகிறது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.