திருவள்ளூரில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்
திருவள்ளூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரு வேறு அணிகளாக பிரிந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி நீண்ட போராட்டங்களுக்கு இடையே ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைந்தது முதலே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது. ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டினர். மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணீயினர் மீது குற்றம் சாட்டினர், பின்னர் அனைவரையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமாதான செய்து வைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.