ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (18:30 IST)

நாலா பக்கமும் கேட் போடும் ஓபிஎஸ் - போலீஸுக்கு போன அதிமுக பஞ்சாயத்து!

அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு. 
 
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறும், கட்சி பரபரப்புகள் அடங்கிய பிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். 
 
பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவிற்கு கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பாஸ் வழங்கப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். அதில் பாதுகாப்பு கோரி மாவட்ட செயலாளர் பெஞ்சமின் விண்ணப்பித்திருப்பது தன்னிச்சையான முடிவு. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்கலாம் என எழுதிய கடிதத்தின் விவரம் மண்டபத்தில் மேலாளருக்கு அனுப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.