செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (14:36 IST)

”எனக்காக இதையாவது செய்யக் கூடாதா?” – ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த எடப்பாடியார்!

EPS OPS
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்குமாறும், கட்சி பரபரப்புகள் அடங்கியபிறகு கூட்டத்தை நடத்தலாம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார். பொதுக்குழுவை தள்ளிவைக்கும் அளவிற்கு கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.