எம்ஜிஆர் சிலையை உடைத்த மர்ம ஆசாமிகள்! – ஓபிஎஸ், டிடிவி தினகரன் கண்டனம்!
சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் “சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனும் எம்ஜிஆர் சிலை சேதம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.