வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (12:33 IST)

எம்.ஜி.ஆரின் மூக்கை உடைத்த விஷமிகள்: சென்னையில் பரபரப்பு!

சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்து மத அமைப்புகள் பல அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், திமுகவின் ஸ்தாபகருமான அறிஞர் அண்ணாவின் சிலையை திமுக கொடியால் தலையை மூடிய மர்ம ஆசாமிகள், செருப்பு மாலை அணிவித்து, ஆ.ராசாவின் படத்தையும் கருப்பு புள்ளி குத்தி மாட்டி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அண்ணா சிலையை அவமதித்தவர்களை போலீசார் தேடிவந்தனர். விசாரணையில் கண்டமங்கலம் அருகே நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ், வீரமணி, பிரதீஷ் மற்றும் சிலர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்தனர், கைதான 3 பேரும் பாஜக உறுப்பினர்கள் என தெரியவந்தது. மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு காவலர் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இருப்பினும் சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என்.செட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குற்றாவாளிகளை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சிலையை ஓபிஎஸ் நேரில் பார்வையிட்டார்.