விஜய் கட்சிக் கொடிக்கு எதிர்ப்பு.! யானை படத்தை நீக்குங்கள்.! பகுஜன் சமாஜ் எச்சரிக்கை..!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்க இருப்பதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார்.
தொடர்ந்து 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கௌரவித்தும் வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த மாத இறுதியில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று விஜய் த.வெ.க கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் எதிர்ப்பு:
இந்நிலையில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும் உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
யானை படத்தை நீக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவகாரம் விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.