ஒரே அட்டையில் எம்டிசி, மெட்ரோ இரண்டிலும் பயணம் –அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
ஒரே பயண அட்டையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் மெட்ரோ ரயில் ஆகிய இரண்டிலும் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகமாகும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து பகுதி பகுதியாக இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்க முடியாத வண்ணம் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதற்கிடையில் பஸ் கட்டண உயர்வுக்குப் பின்பும் சென்னை மாநகராட்சிப் போக்குவரத்துத் துறையின் வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும் தற்போது அதிகரித்துக்கொண்டே வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போக்குவரத்துத் துறைக்கு இன்னும் நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
இதை முன்னிட்டு அரசு, போக்குவரத்துத் துறையின் வருமானத்தை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மற்றுமொரு முயற்சியாக போக்குவரத்துத் துறையையும் மெட்ரோ ரயிலையும் இணைக்கும் திட்டத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘போக்குவரத்துத் துறை மற்றும் மெட்ரோ இரண்டையும் இணைத்து புதிய கேஷ்லெஸ் கார்டு முறை கொண்டுவரப்படும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் பொறுத்தி செயலிகளின் மூலமே பேருந்து எங்கிருக்கிறது என ட்ராக் செய்யும் முறைக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனக் கூறினார்.