வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (13:15 IST)

பொதுக்குழு கூட்டத்துக்கு போகாதீங்க..! – ஓ.பன்னீர்செல்வம் திடீர் கடிதம்!

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பொதுக்குழுகூட்டம் நடைபெறும் என்றும், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திடீரென கடிதம் எழுதியுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் நடைமுறைகளை மீறி பல்வேறு விஷயங்கள் நடந்து வருவதாகவும், அதனால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.