வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 மே 2024 (12:04 IST)

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

11ம் வகுப்பில் விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கார்ணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயத் தொழில் செய்து வரும் சம்பத். இவரது 15 வயது மகன் சர்வேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சர்வேஷ் அதில் 351 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து அதே பள்ளியில் 11ம் வகுப்பு சேர விண்ணப்பித்துள்ளார். அதில் 11ம் வகுப்பில் அவர் கேட்ட பாடப்பிரிவிற்கு அவர் எடுத்திருந்த மதிப்பெண்கள் போதாததால் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சர்வேஷ் சில நாட்களாகவே மன விரக்தியில் இருந்துள்ளார்.


இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் வேலையாக வெளியே சென்றிருந்தபோது தனிமையில் இருந்த சிறுவன் சர்வேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோர் உள்ளே தாழ்பால் போட்டிருந்ததால் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது சிறுவன் சர்வேஷ் தூக்கில் தொங்கியது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உடனடியாக சிறுவன் சர்வேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரும்பிய பாடம் கிடைக்காததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K