கூடங்குளம் தகவல்களை திருடுகிறதா வடகொரியா??
கூடங்குளம் அணு மின் நிலையத்திலுள்ள கணிணிகளிலிருந்து முக்கிய ஆவணங்களை ஹேக்கிங் செய்து வட கொரியா திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் அதிகாரி, தனது டிவிட்டர் பக்கத்தில் ”கூடங்குளம் அணு மின் நிலையத்தின் சர்வர் கணிணியில் வடகொரியா ஹேக்கர்கள் குழுவான ”லாசரஸ்” உருவாக்கிய வைரஸ் ஒன்று தாக்கியுள்ளதாக கூறினார். மேலும் அந்த வைரஸ், கணிணியில் உள்ள ஆவணங்களை திருடக்கூடிய படி உருவாக்கப்பட்ட வைரஸ் எனவும் கூறினார்.
இதனை மறுத்தனர் கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள். ஆனால் அதன் பின் ”நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஓஃப் இந்தியா” நிறுவனம் அதனை ஒத்துகொண்டது. இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த ”IssueMakers Lab” என்ற சைபர் பாதுகாப்பு அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ”கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஹேக்கர்கள் மூலம் வட கொரியா முக்கிய ஆவணங்களை திருட பார்க்கிறது” என கூறியுள்ளது.
மேலும் அணு மின் தயாரிப்பின் மூல பொருளான ”தோரியம்” என்ற வேதி பொருளை தயாரிப்பதில் இந்தியா முன்னோடியாக இருப்பதால், அது குறித்த ஆவணங்களை வட கொரியா திருடுவதற்கு முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.