1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (12:05 IST)

ஆளே இல்லாத கிரவுண்டில் கால்பந்து விளையாடிய கொரிய வீரர்கள்..

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றில் வடகொரியாவுக்கு எதிராக தென் கொரியா மோதிய போட்டியில் ரசிகர்கள் யாரும் இல்லாமல் இருக்கைகள் காலியாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திலிருந்து பிரச்சனை மூண்டுவருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான உலக கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டம் வட கொரியாவில் தலைநகர் பியாங்யாங்கில் கடந்த 15 ஆம் தேதி நடந்தது.

போட்டி நடைபெற்ற போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஆதலால் இந்த போட்டியை நடத்தும் அதிகாரிகள் மட்டுமே இதனை பார்வையிட்டனர். சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில், ஒரு ஈ காகா கூட இல்லை.

ஆட்டத்தை குறித்து தென்கொரிய வீரர்கள், ”போர் போல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், காயங்கள் ஏதுமின்றி தங்கள் வீரர்கள் திரும்பி வந்ததே பெரிய விஷயம்” என அதிருப்தி கொண்டனர். ஆனால் போர் போல் நடைபெற்ற இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியின் வீடியோவை வடகொரியா வெளியிட்டபோதும், வீடியோ தரமாக இல்லாததால், தென் கொரிய தொலைகாட்சி நிறுவனங்கள் அதனை நிராகரித்தது கூடுதல் தகவல்.