செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2019 (18:33 IST)

வாட்ஸ்-ஆப் : 'சைபர்-தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இந்தியர்களும் அடக்கம்'

இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

"அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை," என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர் கார்ல் வூக், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

சைபர் தாக்குதலுக்கு உள்ளான ஒவ்வொருவரையும் தாங்கள் தனித்தனியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மே மாதம் நடந்த இந்த சைபர்-தாக்குதல்கள் நடந்ததைக் கண்டுபிடித்த பின் அதற்கான பாதுகாப்பு 'அப்டேட்டுகளையும்' வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்-ஆப் புகார் கூறும் இஸ்ரேல் நிறுவனம் எது?

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ எனும் நிறுவனம் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கத் தேவையான மென்பொருட்களை உருவாக்கி வருகிறது.

தங்கள் பயனாளர்களின் செல்பேசிகள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலின் பின்னணியில் என்.எஸ்.ஓ நிறுவனம் இருப்பதாக வாட்ஸ்-ஆப் சார்பில் நேற்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த இணையவழித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகத் துறையினர், தங்கள் நாடுகளின் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள், வெவ்வேறு நாடுகளின் வெளியுறவு அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்.

ஆனால, தங்கள் மீதான குற்றச்சாட்டை என்.எஸ்.ஓ மறுத்துள்ளது.

"வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பப்பட்ட 'மால்வேர்' (தீங்கு ஏற்படுத்தும் நிரல்கள்) மூலம், அந்தந்த கருவிகளில் பகிரப்படும் செய்திகள் மற்றும் பிற தகவல் தொடர்புகளை கண்காணிக்க முடியும் என்று," வாட்ஸ்-ஆப் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள 'சிட்டிசன் லேப்' எனும் நிறுவனத்தின் வல்லுநர்கள் உதவியுடன், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களில் உள்ள குறைந்தது 20 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது இந்த சைபர்-தாக்குதல் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்-ஆப் செயலியை உலகெங்கும் சுமார் 150 கோடிப் பேர் பயன்படுத்துகின்றனர். அவர்களில் சுமார் 40 கோடி பயனாளிகள் இந்தியாவில் உள்ளனர்.

இந்திய அரசு கூறுவது என்ன?

இந்தியக் குடிமக்களின் அந்தரங்க உரிமை மீறப்பட்டுள்ளதால் இந்திய அரசு கவலை அடைந்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ள மத்திய சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இது எத்தகைய விதி மீறல் என்பதை விளக்குமாறும், இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்குமாறும் வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் தாங்கள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்தியர்களின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. தகவல்களை இடைமறித்து கேட்க / பார்க்க / படிக்க அரசு முகமைகள் முறையான விதிகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.