வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (20:35 IST)

சென்னையில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது -அமைச்சர் உதயநிதி

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வரலாறு காணாத மழையினால் இங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் படையினர், போலீஸார் மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

சேப்பாக்கம்  திருவல்லிக்கேணி தொகுதிகளின் அனுமந்தபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரிசி, பிரட், பால் உள்ளிட்ட  நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

‘’47 ஆண்டுகளுக்குப் பிறகு அடாது பெய்த கனமழையில் இருந்து கழக அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் சென்னையின் முக்கிய பகுதிகளில் இயல்பு  நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் காரணத்தால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது. மழை - வெள்ளத்தின் போது மின் விபத்துகளை தவிர்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மின் சேவை மீண்டும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் மின் தடை நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறியதால், சாந்தோமில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, மின்சாரத்துறை உயர் அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசி, மின்தடைக்கான காரணத்தை கேட்டறிந்து, விரைந்து மின் விநியோகம் வழங்குமாறு வலியுறுத்தினோம் ''என்று தெரிவித்துள்ளார்.